சாப்பிட்டவுடன் நடக்கலாமா? உடல் எடையைக் குறைக்க உதவுமா?
உணவு சாப்பிட்டவுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி...
சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடந்தால் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க உடற்பயிற்சி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து பரிந்துரை செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
ஆனால், காலையில் எழுந்தவுடன் பலருக்கும் நடைப்பயிற்சி செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. அதனால் மாலை நேரத்திலும் ஏன் இரவிலும்கூட பலரும் நடைப்பயிற்சியில் அல்லது உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் சாப்பிட்டவுடன் நடக்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் சாப்பிட்டவுடன் நடப்பது உடல்ரீதியாக பல்வேறு நன்மைகளைத் தரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதாவது சாப்பிட்டவுடன் நம் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதனை சரிசெய்ய சிறிது நேரம் நடக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
அதேநேரத்தில் சாப்பிட்டவுடன் அதிகமாகவும் நடக்கக் கூடாது என்று எச்சரிக்கின்றனர். அதாவது சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அப்படி நடக்கும்போது உடல் தசைகள், ரத்தத்தில் சேரும் சர்க்கரையை எடுத்துக்கொள்கின்றன. ரத்தத்தில் சர்க்கரை சேர்வதற்கு பதிலாக தசைகளுக்குச் செல்கின்றன. இதனால் ரத்த சர்க்கரை அளவு சமநிலையாக இருக்கிறது.
சாப்பிட்ட பிறகு நடக்காமல் இருப்பதைவிட சாப்பிட்டவுடன் சிறிது நேரமாவது நடப்பது ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எந்தவொரு செயல்பாடும் இல்லாத நிலையை விட ஏதேனும் ஒரு செயல்பாட்டில் ஈடுபடுவது சிறந்தது.
அதுபோல சாப்பிட்ட உடனேயே நடப்பது நல்ல பலன்களைத் தரும் என்றும் குறைந்தது சாப்பிட்ட 15 நிமிடங்களுக்குள் நடக்க ஆரம்பிப்பதே உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் என்றும் ஆய்வில் கூறப்படுகிறது.
குறிப்பாகக் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை உட்கொண்ட பிறகு, 15 நிமிடங்களுக்குள் நடக்கத் தொடங்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்தச் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைக் குறைக்கும்.
அதேபோல சாப்பிட்டு பல மணி நேரத்திற்குப் பிறகு ஒரு அரை மணி நேரம் நடப்பதைவிட, சாப்பிட்டவுடன் ஒரு 10 நிமிடங்கள் நடப்பது அதிக பலன்களைத் தரும் என்றும் கூறப்படுகிறது.
நடப்பது மட்டுமின்றி அலுவலகங்களில் படிகளில் ஏறி இறங்குவது, ஸ்குவாட் செய்வது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு பயிற்சிகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கார்போஹைட்ரேட் உணவுக்குப் பதிலாக நார்ச்சத்து, இரும்புச் சத்து உள்ளஉணவுகளைச் சாப்பிடுவதும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Can you walk immediately after eating? How long should you walk?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.