மெனோபாஸ்: பெண்களே பேசத் தயங்குவதற்குக் காரணம்? செய்ய வேண்டியது என்ன?
இந்தியாவில் அதிகம் பேசப்படாத மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) பற்றிய விழிப்புணர்வின் அவசியம் பற்றி....
- பூனம் முத்ரேஜா, டாக்டர் பிரியா நந்தா
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்திலும் நாம் பேசத் தயங்கும் ஒரு விஷயம், பெண்களின் மாதவிடாய் பற்றியும் மெனோபாஸ்(Menopause) எனும் மாதவிடாய் நிறுத்தம் பற்றியும்...
இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகளின் மாதவிடாய் சுகாதாரம் பற்றி தற்போது ஓரளவு பேசப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பெண்களின் மாதவிடாய் நிறுத்தம் எனும் மெனோபாஸ் பற்றி பேச பெண்களே தயக்கம் காட்டுகின்றனர்.
Advertisement
Advertisement
இந்தியாவில் பெண்கள், சராசரியாக மெனோபாஸ் ஆகும் வயது 46. சில நாடுகளில் முன்னதாகவும் சில நாடுகளில் உள்ள பெண்களுக்கு தாமதமாகவும் நிகழ்கின்றன.
பெண்கள் இதனை ஒரு பொதுவான அனுபவமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இதனால் அதிகம் பாதிக்கப்படும் பெண்களைக் குடும்பத்தினர் கண்டுகொள்வதில்லை.
மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய 'ப்ரீ மெனோபாஸ்' மற்றும் மாதவிடாய் நிறுத்தக் காலங்களில் சில பெண்கள் சில ஆண்டுகளுக்குக்கூட நீண்ட அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.
அறிகுறிகள்
ஹாட் பிளாஷிங் எனும் திடீரென உடல் வெப்பம் அதிகரிப்பது, உறக்கத்தில் பிரச்னை, மனச்சோர்வு, மூட்டு வலி, அறிவாற்றல் சார்ந்த மாற்றங்கள்.
இவை பெரும்பாலும் உடல், மனரீதியாகவும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் அதிகம் பாதிக்கின்றன. இந்தியப் பெண்களில் பெரும்பான்மையானோர், மருத்துவ வழிகாட்டுதலோ அல்லது நிறுவன ஆதரவோ இன்றி, தாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம், என்ன வலிகளை அனுபவிக்கிறோம் என்பதை அறியாமலேயே / கண்டுகொள்ளாமலேயே மௌனமாகக் கடந்து செல்கின்றனர்.
2026 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 14 கோடி பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண்களின் ஆயுள்காலம் சராசரியாக 73.6 என்ற நிலையில், மெனோபாஸுக்கு பிறகும் பெண்கள் சுமார் 25-30 ஆண்டுகள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளைக் கையாள்வதற்கு பெண்களின் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது.
நாடு முழுவதும் 25,256 பெண்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்தபோது, மெனோபாஸால் ஏற்படும் பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
பெண்களில் 7.4% பேர் முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தத்தையும் (40 வயதுக்கு முன்) 17.5% பேர் ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தையும் (40 முதல் 44 வயது) எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவில் மெனோபாஸுக்கான சராசரி வயது 46. இது உலகளாவிய சராசரியைவிட மிகவும் குறைவாகும். ஆரம்பகால மற்றும் முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம், இதய நோய்கள், எலும்புப் புரை, மனச்சோர்வு, அறிவாற்றல் குறைவு ஆகியவற்றின் அபாயங்களை கணிசமாக அதிகரிக்கின்றன. இவை இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு நீண்டகால உடல்நலப் பாதிப்பபாகவும் இருக்கின்றன.
2030-க்குள் உலகம் முழுவதும் 120 கோடி பெண்கள் மாதவிடாய் நிறுத்தம் அல்லது அதற்குப் பிந்தைய நிலையில் இருப்பார்கள் என்றும் எனவே அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க உலக சுகாதார அமைப்பு மற்றும் தேசிய அரசுகளை உலக தலைவர்கள் இணைந்து வலியுறுத்தியுள்ளனர்.
மனநலம் அவசியம்!
மாதவிடாய் நிறுத்தத்தின்போது பெண்கள் பலரும் மன அழுத்தத்திற்கும் மனச் சோர்வுக்கும் ஆளாகின்றனர். 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களிடையே மனச்சோர்வின் சராசரி 21.76% ஆக உள்ளது. இது இளம் பெண்களைவிட அதிகமாகும்.
மாதவிடாய் நின்ற பெண்களில் 22%-க்கும் அதிகமானோர் தொடர்ச்சியான தூக்கக் கோளாறுகளை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் அறிகுறிகள் உள்ள பெண்களில் 10ல் 1 -க்கும் குறைவானவர்களே மருத்துவ உதவியை நாடுகின்றனர்.
இதற்குக் காரணம் அறிகுறிகள் பெரிதாக இருப்பதில்லை என்பது மட்டுமல்ல, இவற்றையெல்லாம் பேச வேண்டுமா? சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா? என யோசிப்பதுதான். இதற்கான மருத்துவ சிகிச்சைகள் இருப்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற சமூகக் கட்டமைப்பும் காரணம்.
பொருளாதாரம்...
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மீது இந்த சுமை அதிகம் விழுகிறது, அதாவது இதற்காக செலவழிக்க வேண்டுமா என பெண்களே அமைதி காக்கின்றனர். ஆய்வின் தரவுகள் இதனை தெளிவாக எடுத்துரைக்கின்றன.
கல்வி பயிலாதது, தங்கள் பெயரில் சொத்துக்கள் இல்லாதது, குடும்பத்தில் முடிவெடுப்பதில் அதிகாரம் இல்லாதது ஆகியவை அவர்களை உடல், மனரீதியான பாதிப்புக்கின்றன.
ஊட்டச்சத்துக் குறைபாடு, மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள சிரமம், அதுமட்டுமின்றி தாங்கள் எதிர்கொள்வது ஒரு உடல்நலப் பிரச்னை என்பதைச் சமூகம் அங்கீகரிக்காதது ஆகிய சூழல்களுக்கு மத்தியிலேயே கிராமப்புறப் பெண்கள் மாதவிடாய் நிறுத்தக் காலத்தை எதிர்கொள்கின்றனர்.
இருப்பினும், இந்தியாவின் தேசிய சுகாதாரக் கட்டமைப்பு இதற்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை. தில்லி எய்ம்ஸ் மற்றும் சில மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான சில சிறப்பு மருத்துவ மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் சிகிச்சை கிடைத்தாலும் கிராமப்புற பெண்களுக்கு அது எட்டும் தூரத்தில் இல்லை என்பதே கசப்பான உண்மை.
என்ன செய்ய வேண்டும்?
சுகாதாரத் துறை இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மாதவிடாய் நிறுத்தம் - முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அதற்கான, ஆலோசனைகள் சிகிச்சைகள் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். சுகாதாரப் பணியாளர்களுக்கும் இதுபற்றிய பயிற்சியும் வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட வேண்டும். பெண்கள் இதுபற்றி பேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.
இந்தியப் பெண்களில் 75 சதவீதம் பேர் மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவ உதவியை நாடுகின்றனர். குழந்தைப்பேறு முடிந்தவுடன் பெண்களின் உடல்நலன் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. மாதவிடாய் நிறுத்தத்தை ஒரு பொது விவாதமாக மாற்றாதவரை இதில் மாற்றம் நிகழப்போவதில்லை.
அதனால் பெண்களும் தங்கள் உடல்நிலை மீது அக்கறை கொண்டு இதற்கான சிகிச்சைகள், மனநல ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் சுகாதாரத்தை கவனத்தில் கொள்ளாவிட்டால் நாட்டில் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளும் அதிகமாகும்.
(பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பூனம் முத்ரேஜா, உலக சுகாதார அமைப்பின் குழந்தைப் பிறப்பு திட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் பிரியா நந்தா கூறியதிலிருந்து....)
தமிழில்: எம். முத்துமாரி