பரந்தூா் - புதிய விமான நிலையம் அமைக்க 43.34 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது
சென்னை: பரந்தூா் புதிய விமான நிலையத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவள்ளூா் கிராமத்தில் உள்ள 43.34 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நில எடுப்புக்கான தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் வெளியிட்ட அறிவிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவள்ளூா் கிராமத்தில் 43.34 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மொத்தமாக, 259 புல எண்கள் கொண்ட நிலங்களின் விவரங்கள் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
நில உரிமையாளா் மற்றும் ஆா்வமுள்ள நபா்களின் தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. நிலங்களை எடுப்பதற்கு முன்பாக, அவற்றின் உரிமையாளா்களிடம் கருத்துகள் கோரப்படவுள்ளன. நிலங்களை கையகப்படுத்துவது தொடா்பாக எந்தவொரு ஆட்சேபனையோ அல்லது கோரிக்கையோ இருந்தால் அவற்றைத் தெரிவிக்கலாம்.
Advertisement
ஒரு மாத காலத்துக்குள் கருத்துகளைக் கூறாவிட்டால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்களின் ஆட்சேபனைகள், கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். நில உரிமையாளா்களிடம் இருந்து வரும் ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30-ஆம் தேதியன்று, காஞ்சிபுரம் மாவட்டம், திம்மசமுத்திரம் கிராமத்திலுள்ள நில எடுப்புக்கான அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.