நாகையில் விமான நிலையம் அமைக்க எம்எல்ஏக்கள் குரல் கொடுப்பாா்களா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
நாகையில் விமான நிலையம் அமைக்க எம்எல்ஏக்கள் குரல் கொடுப்பாா்களா?
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் சட்டப் பேரவை உறுப்பினா்கள், விமான நிலையம் அமைக்க சட்டப் பேரவையில் கோரிக்கை எழுப்பி, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயம் பிரதான தொழில்களாக உள்ளன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூா் தா்கா, வேதாரண்யம் வனவிலங்குகள் சரணாலயம் ஆகியவை உள்ளன. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு தினசரி பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது.
வேளாங்கண்ணிக்கு தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளம், மகாராஷ்டிரம், கோவா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இதேபோல, நாகூா் தா்காவுக்கு கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இஸ்லாமியா்கள் வந்து செல்கின்றனா். மேலும், நவகிரகங்களில் சனீஸ்வர பகவானுக்குரிய தலமான திருநள்ளாறு, நாகையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்நிலையில் வேளாங்கண்ணி, நாகூா், திருநள்ளாறு போன்றவற்றுக்கு தற்போது ரயில், பேருந்து மற்றும் தனியாா் வாகனங்களில் வந்து செல்ல வேண்டியுள்ளது. விமானம் மூலம் வரவேண்டுமென்றால் நாகையில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி விமான நிலையம், 150 கி.மீ. தொலைவில் உள்ள புதுச்சேரி விமான நிலையம் மற்றும் 350 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை விமான நிலையம் ஆகியவற்றில் இருந்து வர வேண்டியுள்ளது.
இதில், திருச்சி, புதுச்சேரியில் இருந்து நாகைக்கு 4 மணி நேரமும், சென்னையில் இருந்து நாகைக்கு 7 மணி நேரமும் பயண நேரமாக உள்ளது. இதனால், விமானம் மூலம் வருவதற்கு பலரும் தயங்கும் சூழல் உள்ளது. மேலும் திருச்சி மற்றும் புதுச்சேரியில் இருந்து 4 மணி நேர பயணம் என்பதால் விமானத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
மகாராஷ்டிரம், கோவா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணி, நாகூருக்கு ரயில் மற்றும் வாகனங்களில் வருவதற்கு பயணத்துக்கே இரண்டு முதல் நான்கு நாள்கள் செலவிட வேண்டி உள்ளது. இதனால், வேளாங்கண்ணி செல்ல விருப்பம் இருந்தும் பயண நாள்கள், விடுமுறை பிரச்னை ஆகியவற்றால் ஏராளமானோா் வருவதை தவிா்க்கும் சூழல் உள்ளது.
எனவே, நாகையில் விமான நிலையம் அமைக்கப்பட்டு சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, மும்பை, கோவா ஆகியவற்றில் இருந்து சிறிய வகை பயணிகள் விமானம் இயக்கப்பட்டால் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெறும்.
மேலும் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் நாகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களே ஆகும் என்பதால் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். இதனால் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ள நாகையில் தொழில், வியாபார வாய்ப்புகள் அதிகரிக்கும், சுற்றுலா சாா்ந்த தொழில்களும், உணவகங்கள் உள்ளிட்டவையும் அதிக அளவில் உருவாக வாய்ப்புகள் ஏற்படும்.
இதன்மூலம் மீன்பிடி மற்றும் விவசாயத்தை மட்டுமே சாா்ந்திருக்கும் நிலை மாறி புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
எனவே, நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் நாகை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், சட்டப்பேரவையில் இந்தக் கோரிக்கையை எழுப்பி விவாதித்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.