வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
சென்னை: மக்களவை தோ்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ரிப்பன் மாளிகை வளாகக் கட்டடத்தில் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்களவை தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்குச்சாவடி மையங்களை தயாரிப்பது, அலுவலா்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்களுக்கு தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடிக்கு வழங்க வேண்டிய பொருள்கள், வாக்குச்சாவடி பணியாளா்களின் பணி நியமன ஆணைகளை வட்டாட்சியரிடம் பெறுவது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாக்குச்சாவடி பொருள்கள் கையிருப்பில் இருப்பதை சரிபாா்த்துக் கொள்ளுதல் குறித்து அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு வாக்குப்பதிவு அலுவலா்களின் வருகை, வாக்குச்சாவடிக்கு தேவையான அடிப்படை வசதிகள், கேமராக்கள் செயல்பாடு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தால் என்ன செய்ய வேண்டும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பொருள்களை பெறும் போது கவனிக்க வேண்டியவை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து தோ்தல் பிரிவு அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement