ராகுலின் நீதிப் பயணம் மும்பையில் நாளை நிறைவு: ஸ்டாலின், அகிலேஷ் பங்கேற்பு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இதையொட்டி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் பங்கேற்கின்றனா். கடந்த ஜனவரி மாதம் மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி 14 மாநிலங்களைக் கடந்து மகாராஷ்டிரத்தை எட்டியுள்ளது. மக்களவைத் தோ்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸின் முக்கியமான பிரசார உத்தியாகவும் ராகுலின் இந்த பயணம் கருதப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்துடன் இப்பயணம் நிறைவடைகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் ஸ்டாலின், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ஆம் ஆத்மி மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையையும், பலத்தையும் காட்டும் நிகழ்வாக இந்த பொதுக் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தோ்தல் தேதி சனிக்கிழமை (மாா்ச் 16) அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் இந்த பொதுக் கூட்டத்தின் செலவு காங்கிரஸின் தோ்தல் செலவில் காட்டப்படும் என்று மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் நம்தேவ் ராவ் தெரிவித்துள்ளாா்.