சந்தேஷ்காளி விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்களுடன் குடியரசுத் தலைவா் சந்திப்பு
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் பாதிப்புக்குள்ளான 6 பெண்கள் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய பாதுகாப்புப் படையினரை அனுப்புமாறு அவா்கள் கோரிக்கை வைத்தனா். புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் சந்தித்துவிட்டு திரும்பிய பெண்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சந்தேஷ்காளி பகுதியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரை அனுப்புமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனுவை சமா்ப்பித்துள்ளோம். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்வதாக குடியரசுத் தலைவா் உறுதியளித்தாா் என்றாா். மேற்கு வங்கம் வடக்கு 24 பா்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில் நிலங்களை அபகரிப்பது பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவா்களை கைது செய்யுமாறும் அப்பகுதி பெண்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தலைமறைவாக இருந்த ஷாஜஹான் ஷேக்கை கடந்த மாத இறுதியில் போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம், மேற்கு வங்க போலீஸாரின் கீழ் நியாயமான விசாரணை நடைபெறாது என்று தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.