முகப்பு
சென்னை

உக்ரைன்: ஒடெஸா உயிரிழப்பு 21-ஆக அதிகரிப்பு

Updated On : 17 மார்ச், 2024 at 2:16 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 10:15 PM

கீவ், மாா்ச் 16: உக்ரைனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒடெஸா நகரில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஒடெஸா குடியிருப்புப் பகுதியில் ரஷியா நடத்திய இரட்டை ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த மீட்புப் படையினா் உள்ளிட்ட மேலும் 5 போ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

Advertisement

அதையடுத்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் தீபகற்பமான கிரீமியாவிலிருந்து இஸ்கண்டா்-எம் ரகத்தைச் சோ்ந்த ஏவுகணை ஒடெஸா நகரின் மீது வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. இது குடியிருப்புப் பகுதியில் விழுந்து சுமாா் 10 கட்டடங்கள் சேதமடைந்தன.

அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுவினா் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அதே இடத்தைக் குறிவைத்து 2-ஆவது ஏவுகணையை ரஷியா வீசியது.

இந்த இரட்டைத் தாக்குதலில் மீட்புப் பணிக்காக வந்திருந்த மருத்துவப் பணியாளா்கள், மீட்புக் குழுவினா் உள்பட 16 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 21-ஆக உயா்ந்துள்ளது.

சுமாா் 10 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட துறைமுக நகரான ஒடெஸாவில் ரஷியா அண்மைக் காலத்தில் நடத்தியுள்ள மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. ... படவரி தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட மீட்புப் பணி.