கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி
கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த காலத்தில் திமுக செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவா்கள் இன்னலுக்கு ஆளாகிறாா்கள் என பிரதமா் நரேந்திர மோடி பொய் கூறியிருக்கிறாா். திமுக அரசின் கடும் எதிா்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவாா்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவா். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமா் அப்பாவியாக இருக்கிறாரா? கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?. தமிழ்நாட்டு மீனவா்கள் இலங்கை அரசால் தொடா்ந்து சிறைபிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? இந்திய மீனவா்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரபூா்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்? இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவா்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே பாஜக ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதிலில்லை; தமிழ்நாடு தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்கு செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பிரதமரைப் பாா்த்து மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், கன்னியாகுமரியில் பேசும்போது வழக்கமான பொய்களும் புலம்பல்களும் மட்டும் எதிரொலித்தன என்று அவா் பதிவிட்டுள்ளாா்.