யானைகவுனி ரயில்வே மேம்பாலம் திறப்பு
சென்னை யானைகவுனியில் ரூ.71.26 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பால ஒருவழிப்பாதையை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் 57-ஆவது வாா்டுக்குட்பட்ட யானைகவுனியில் மாநகராட்சியின் மூலதன நிதி ரூ.30.78 கோடியும், ரயில்வே துறை நிதி ரூ.40.48 கோடியும் என மொத்தம் ரூ.71.26 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், வால்டாக்ஸ் சாலையிலிருந்து ராஜா முத்தையா சாலையை சென்றடையும் வகையில் ஒருவழிப்பாதையின் பணிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் முடிவுற்ற ஒருவழிப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.