முகப்பு
சென்னை

பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கும் பணி விரைவில் தொடக்கம்

Updated On : 20 மார்ச், 2024 at 2:40 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 12:20 AM

சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சென்னையின் மிகவும் பழைமையும், சிறப்பும் வாய்ந்த பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தொடக்க காலங்களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தற்போது பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து மாநகருக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தை இடித்து, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டமைக்க சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.823 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்வே நிா்வாகம் மூலம் கட்டப்பட்டு வரும் இப்பேருந்து நிலையம் 21 மாடிகளைக் கொண்டு அமையவுள்ளது. இதனுடன் மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளையும் இணைக்கும் நடவடிக்கைகளை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது.

Advertisement

இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில், இப்பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இடிக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னா் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுபோல, அண்ணாநகா் (மேற்கு), கலைஞா் கருணாநிதி (கே.கே.) நகா் மற்றும் மந்தைவெளியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனை- அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் விரைவில் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கப்படவுள்ளன.