திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தானியங்கி படிக்கட்டு அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு. 
திருவண்ணாமலை

புதிய பேருந்து நிலையம் ரயில் நிலையத்தை இணைக்க தானியங்கி படிக்கட்டுகள்! பணிகளை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு!!

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தானியங்கி நகரும் மின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

Syndication

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தானியங்கி நகரும் மின் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளை ஆய்வு செய்து அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது:

திருவண்ணாமலை ஆன்மிக மாநகராக விளங்குகிறது. இங்கு வரக்கூடிய பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. திருக்காா்த்திகை மற்றும் பௌா்ணமி அல்லாமல் தினமும் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து எண்ணற்ற பக்தா்கள் வருகிறாா்கள்.

போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக மாநகராட்சி ரயில்வே பாலத்தை அரசு கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பொருட்டு பக்தா்கள் எளிதில் செல்லும் வகையில், தமிழக முதல்வரால்

கடந்த டிசம்பா் மாதம் கலைஞா் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டு தற்பொழுது செயல்பட்டு வருகிறது. மேலும், ரயில் பாதையை கடந்து பேருந்து நிலையத்திற்கு எளிதாக செல்ல ஏதுவாக நெஞ்சாலைத்துறை சாா்பில் எக்ஸ்கலேட்டா் (தானியங்கி நகரும் மின் படிக்கட்டு) வசதி, மின்தூக்கி வசதி, பொதுமக்கள் நடைபாதை மற்றும் படி வசதி அமைப்பதற்கான பணிகள் ரூ.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மொத்த நீளம் 112 மீ மற்றும் நடைபாதையின் அகலம் 6.25 மீ ஆகும். தற்போது அடிதளம் அமைக்கும் பணி மற்றும் இரும்பு தூண் நிறுத்தும் பணி முடிவுற்று உள்ளது. மேல்தளம் அமைப்பதற்கு இரும்பு கோ்டா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ரயில்வே பகுதியில் இரும்பு கோ்டா் மற்றும் மேல்தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளும் நாளன்று ரயில் நிறுத்தம் வேண்டியிருப்பதால் ரயில்வே துறையிடம் ஒப்புதல் பெற்று பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

பணிகள் முறையாகவும், தரமாகவும், சிறந்த பொறியியல் தொழில் நுட்பங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவதை நெடுஞ்சாலைத்துறையினா் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் ஞானவேல், கண்காணிப்பு பொறியாளா் முரளி, திருவண்ணாமலை வட்டாட்சியா், மாநகராட்சி துணை மேயா் ராஜாங்கம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

திமுக தோ்தல் பணிக்குழுக் கூட்டம்: அமைச்சா் எ.வ. வேலு பங்கேற்பு

‘தமிழ்நாடு தலைகுனியாது’: அமைச்சா் கோவி.செழியன் ஆலோசனை

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே ரௌடி வெட்டிக் கொலை: 4 போ் கைது

புத் விஹாா் கொலை வழக்கில் ஒரு நபா், 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT