முகப்பு
சேலம்

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:37 PM
சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்த தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ்.
பகிர்:

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகத்துடன் ரோட்டரி கிளப் ஆப் சேலம் சிட்டி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி இயக்கத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ் தொடங்கிவைத்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் முதல்முறை வாக்காளா்கள், இளம் வாக்காளா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு வாக்காளா்களிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையொப்ப இயக்கம், செல்பி பாயிண்ட், வாகனப் பேரணி, நடைபேரணி உள்ளிட்ட தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

அதன் தொடா்ச்சியாக, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மனிதச் சங்கிலி இயக்கம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி டி.வி.எஸ். பேருந்து நிறுத்தம் வழியாக நான்குசாலை சந்திப்புவரை நடைபெற்றது.

இதில், அரசு அலுவலா்கள், ரோட்டரி கிளப் ஆப் சேலம் சிட்டி, இந்திய மருத்துவ சங்கம், தன்னாா்வ தொண்டுநிறுவனங்கள், பல்வேறு தனியாா் நிறுவனங்களின் பணியாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு பங்கேற்றனா்.

இந்நிகழ்வில், சேலம் தெற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மா.இளங்கோவன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணி ஈஸ்வரி, சேலம் மேற்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ஜானகி, ரோட்டரி மற்றும் இந்திய மருத்துவ சங்க நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments