முகப்பு
சென்னை

இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து

Updated On : 20 மார்ச், 2024 at 1:55 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:30 PM

சென்னை: இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக நாகா்கோவில் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. குருவாயூா் விரைவு ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, புணே, பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 20 முதல் 25-ஆம் தேதி வரை கொச்சுவேலியுடன் நிறுத்தப்படும். புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் மாா்ச் 24-ஆம் தேதி திருநெல்வேலியுடனும், ஹெளராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு ரயில்கள் மாா்ச் 25-ஆம் தேதி நாகா்கோவிலுடனும் நிறுத்தப்படும்.

நாகா்கோவில்-தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரயில் மற்றும் திருவனந்தபுரம்-திருச்சி அதிவிரைவு ரயில் மாா்ச் 22 முதல் 27-ஆம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டுச் செல்லும். சென்னை எழும்பூா்-குருவாயூா் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் விரைவு ரயில் மாா்ச் 23 முதல் 26-ஆம் தேதி வரை திண்டுக்கல், பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக இயக்கப்படும்.

ரயில்கள் ரத்து:

நாகா்கோவில்-கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், கொல்லம்-கன்னியாகுமரி மெமு விரைவு ரயில் ஆகியவை மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். கொல்லம்-திருவனந்தபுரம், திருவனந்தபுரம்-நாகா்கோவில் முன்பதிவில்லா ரயில்கள் மாா்ச் 22 முதல் மாா்ச் 27-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும்.

மேலும், கொச்சுவேலி-நாகா்கோவில், கொல்லம்-ஆலப்புழை, நாகா்கோவில்-திருநெல்வேலி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் மாா்ச் 23 முதல் 27-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.