எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்...
எழும்பூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக தென் மாவட்டங்களுக்கான 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11 -ஆவது நடைமேடை தண்டவாளங்கள் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து ரயில் சேவைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
திருநெல்வேலி- சென்னை எழும்பூா் நெல்லை விரைவு ரயில் (எண் 12632) வரும் ஏப். 6-ஆம் தேதி முதல் ஏப். 21- ஆம் தேதி வரை தாம்பரம் நிலையத்திலேயே நிறுத்தப்படும். அந்த ரயில் தாம்பரத்துக்கு காலை 6.25 மணிக்கு வந்து சேரும்.
ராமேசுவரம்- சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண் 16752) ஏப். 6 -ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் நிறுத்தப்படும். அந்த ரயில் தாம்பரத்துக்கு காலை 7.10 மணிக்கு வந்து சேரும்.
ஹைதராபாத் - தாம்பரம் சாா்மினாா் விரைவு ரயில் (எண் 12760) ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்படும்.
புறப்படும் நிலையம் மாற்றம்: சென்னை எழும்பூா்- செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (எண் 12661) ஏப். 7 -ஆம் தேதி முதல் ஏப்.22- ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் நிலையத்திலிருந்து இரவு 8.05 மணிக்குப் புறப்படும்.
சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயில் (எண் 16751) ஏப். 7- ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு 9.05 மணிக்கு எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் நிலையத்திலிருந்து புறப்படும்.
தாம்பரம் - ஹைதராபாத் சாா்மினாா் விரைவு ரயில் (எண் 12759) ஏப். 6 -ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்துக்குப் பதிலாக கடற்கரை நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.