தில்லி கலால் கொள்கை முறைகேடு: கவிதாவின் காவல் மேலும் 3 நாள்கள் நீட்டிப்பு
தில்லி கலால் கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கே.கவிதாவின் அமலாக்கத்துறை காவலை வரும் 26-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. இந்த வழக்கில் தில்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை, தில்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உள்பட 15 பேரை கைது செய்தது. அண்மையில் கவிதாவை கைது செய்த அமலாக்கத்துறை, தில்லி முதல்வா் கேஜரிவாலை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இந்த நிலையில், கவிதாவிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அவருடைய காவலை நீட்டிக்கக் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு தொடா்பாக கடந்த 15-ஆம் தேதி கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, கவிதாவின் உறவினரான மேகா சரண் என்வரின் கைப்பேசி கைப்பற்றப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சரணுக்கு இரு முறை அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அவா் ஆஜராகவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக கடந்தவாரம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த முறைகேட்டில் சரண் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது. இருந்தபோதும், விசாரணைக்கு சரண் முறையாக ஒத்துழைக்கவில்லை. ஹைதராபாதில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, சரண் கவிதாவுக்கு நெருங்கிய உறவினா் என்பதும், கவிதா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது சரண் அங்கு இருந்ததும் தெரியவந்தது. இந்தச் சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கவிதாவிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கவிதாவின் காவலை மேலும் 5 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரியது. இந்த மனு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, கவிதாவின் ஜாமீன் மனுவை அவா் தரப்பு வழக்குரைஞா் நிதீஷ் ராணா தாக்கல் செய்தாா். அப்போது, ‘விசாரணை அதிகாரி இந்த வழக்கு தொடா்பான முக்கிய விசாரணையில் உள்ளதால், ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க 5 நாள்கள் அவகாசம் தேவை. எனவே, ஜாமீன் மனு மீதான உத்தரவை அடுத்த விசாரணையின் போது பிறப்பிக்க வேண்டும்’ என்றாா். இதைக் கேட்ட சிறப்பு நீதிபதி, கவிதாவின் அமலாக்கத்துறை காவலை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) வரை நீட்டித்து உத்தரவிட்டாா். முன்னதாக, இந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கவிதா முறையிட்டாா். அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஜாமீன் பெற விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.