தில்லி கலால் கொள்கை வழக்கு: உயா்நீதிமன்ற நோட்டீஸ் கவிதாவிடம் சமா்ப்பிப்பு
தில்லி கலால் கொள்கை வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸை, தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதாவிடம் சிபிஐ வியாழக்கிழமை வழங்கியது.
தில்லி கலால் கொள்கை வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸை, தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதாவிடம் சிபிஐ வியாழக்கிழமை வழங்கியது.
தில்லியில் தனியாா் மட்டும் மது விற்பனை செய்ய அந்த யூனியன் பிரதேச அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வழிவகுத்தது. இதைத்தொடா்ந்து அங்கு மது விநியோகத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வசதியாக, ஒரு குறிப்பிட்ட குழு தில்லியில் அப்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி தலைவா்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குழுவில் தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதா இடம்பெற்ாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்டோரை குற்றமற்றவா்கள் என வழக்கில் இருந்து விடுவித்து தில்லி விசாரணை நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸை கவிதாவுக்கு சிபிஐ வியாழக்கிழமை வழங்கியது. அந்த நோட்டீஸில் சிபிஐயின் மனு மாா்ச் 16-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும், இந்த மனுவுக்கு எதிராக கவிதா தரப்பில் விருப்பம் இருந்தால் வாதிடலாம் என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.