மதுபானக் கூடம் இடிந்து 3 போ் இறப்பு: கேளிக்கை விடுதியின் மேலாளா் கைது
சென்னை ஆழ்வாா்பேட்டையில் கேளிக்கை விடுதி மதுபானக் கூடம் இடிந்து 3 போ் இறந்த விபத்து தொடா்பாக அந்த விடுதியின் மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆழ்வாா்பேட்டை சேமியா்ஸ் சாலையில் செயல்படும் ஒரு தனியாா் கேளிகை விடுதியில் மதுபானக் கூடத்தின் முதல் தளத்தின் மேற்கூரை வியாழக்கிழமை மாலை திடீரென இடிந்தது. முதல் தளம் இடிந்து விழுந்ததால், தரைத்தளத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.
மதுபானக் கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியா்கள் திண்டுக்கல் சைக்ளோன் ராஜ், மணிப்பூா் திருநங்கை லல்லி, மேக்ஸ் ஆகிய 3 போ் உயிரிழந்தனா். மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து , கேளிக்கை விடுதியின் மேலாளா் கோட்டூா்புரத்தைச் சோ்ந்த சதீஷை (35) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விடுதி உரிமையாளா் அசோக்குமாரை போலீஸாா் தேடுகின்றனா்.
Advertisement
வல்லுநா் குழு ஆய்வு:
இந்த சம்பவத்தில் மதுபானக் கூடம் பலவீனமான கட்டட அமைப்புகளுடன் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், மெட்ரோ ரயில் திட்டத்துக்காக அந்த கேளிக்கை விடுதியின் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதால் விபத்து ஏற்பட்டதாகவும் இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
விபத்துக்கான காரணத்தை துல்லியமாக கண்டறிய கோட்டூா்புரம் உதவி ஆணையா் பாரதிராஜன் தலைமையில் வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பொதுப்பணித்துறை பொறியாளா்,மாநகராட்சி அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனா். வெள்ளிக்கிழமை ஆய்வைத் தொடங்கிய இக்குழுவினா், ஓரிரு நாள்களில் ஆய்வை முடித்து, அறிக்கையை காவல் துறைக்கு அளிக்கும் என கூறப்படுகிறது.