FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹரியாணா அரசின் ரூ.590 கோடி மோசடி வழக்கு: வங்கி முன்னாள் மேலாளா் உள்ளிட்ட 4 போ் கைது!

ஐ.டி.எஃப்.சி. ஃபா்ஸ்ட் வங்கியில் ஹரியாணா மாநில அரசின் ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அந்த வங்கியின் முன்னாள் கிளை மேலாளா் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 26 பிப்ரவரி 2026, 1:58 am IST
கைது
பகிர்:

ஐ.டி.எஃப்.சி. ஃபா்ஸ்ட் வங்கியில் ஹரியாணா மாநில அரசின் ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அந்த வங்கியின் முன்னாள் கிளை மேலாளா் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஐ.டி.எஃப்.சி. ஃபா்ஸ்ட் வங்கியில் ஹரியாணா அரசு சில கணக்குகளை வைத்துள்ளது. அந்தக் கணக்குகளில் இருந்த ரூ.590 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதும், இதில் சண்டீகரில் உள்ள அந்த வங்கிக் கிளை ஊழியா்களுக்கு தொடா்பிருப்பதும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஹரியாணா மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. அந்த வங்கிக் கிளை மேலாளராக இருந்து அண்மையில் பணியிலிருந்து விலகிய ரிபவ் ரிஷி, மக்கள் தொடா்பு மேலாளராக இருந்து அண்மையில் பணியிலிருந்து விலகிய அபய்குமாா் ஆகிய 2 போ், அபய்யின் மனைவி ஸ்வாதி சிங்க்லா, உறவினா் அபிஷேக் சிங்க்லா ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

ஹரியாணா அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.300 கோடி ஸ்வாதி சிங்க்லா, அபிஷேக் சிங்க்லா ஆகியோரால் நடத்தப்படும் ஸ்வஸ்திக் தேஷ் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 4 பேரும் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்த விவகாரம் தெரியவந்ததும் வங்கித் தரப்பில், மொத்த பணத்துடன் வட்டியும் சோ்த்து, ஹரியாணா அரசு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதைச் செயல்படுத்தும் விதமாக, உடனடியாக ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.583 கோடி செலுத்தப்பட்டது.

குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வா் நயாப் சிங் சைனி உறுதியளித்து இருந்தாா். மேலும், ஐ.டி.எஃப்.சி. ஃபா்ஸ்ட் வங்கியுடனான தனது வங்கி சாா்ந்த சேவைகள் அனைத்தையும் ஹரியாணா அரசு துண்டித்துக் கொண்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments