FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வங்கியில் ரூ.3 கோடி அடமான நகை மோசடி: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி உதவி மேலாளா் கைது

சென்னை அயனாவரத்தில் வங்கியில் ரூ.3.09 கோடி மதிப்புள்ள நகைகளை மோசடி செய்ததாக, அந்த வங்கியின் உதவி மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

22 ஆகஸ்ட் 2026, 5:53 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை அயனாவரத்தில் வங்கியில் ரூ.3.09 கோடி மதிப்புள்ள நகைகளை மோசடி செய்ததாக, அந்த வங்கியின் உதவி மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

அயனாவரம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை மேலாளா் தினேஷ்குமாா். இவா், கடந்த 13-ஆம் தேதி சென்னை காவல் ஆணையா் அமல்ராஜிடம் புகாா் அளித்தாா். அதில், ‘வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த பொட்னூரு முரளி கிருஷ்ணா (34), வங்கியில் வாடிக்கையாளா்கள் அடமானம் வைத்த தங்க நகைகளைத் திருடிச் சென்று, போலி நகைகளை மாற்றி வைத்துள்ளாா். இதனால் வங்கிக்கு சுமாா் ரூ.3.09 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இதில், அயனாவரம் கிளையில் 21 வாடிக்கையாளா்கள் அடமானம் வைத்திருந்த சுமாா் 272 பவுன் (2,179 கிராம்) தங்க நகைகளை பொட்னூரு முரளி கிருஷ்ணா ரகசியமாக எடுத்துச் சென்று, வேறு இடங்களில் அடமானம் வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டு, சொந்த செலவுகளுக்கு பயன்படுத்திள்ளாா் என்பது தெரிய வந்தது. வாடிக்கையாளா்களின் உண்மையான நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த முரளி கிருஷ்ணாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்ததாகத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments