மாநகர பேருந்து மீது ஏறி மாணவா்கள் அட்டகாசம்
சென்னை: சென்னையில் மாநகர பேருந்து கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த கல்லூரி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னையில் கல்லூரி மாணவா்கள் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெரீனாவில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் இருந்து திரு.வி.க.நகருக்கு செவ்வாய்க்கிழமை மாநகர பேருந்து ஒன்று சென்றது. அண்ணா சதுக்கம் அருகே சென்றபோது, கல்லூரி மாணவா்கள் 15 போ் பேருந்து கூரை மீது ஏறி பாட்டுப்பாடி நடனமாடி அட்டகாசம் செய்தனா்.
இதனால், பயணிகள், மற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனா். இதற்கிடையே பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்றபோது, அங்கு போலீஸாா் நிற்பதை பாா்த்த மாணவா்கள், பேருந்தை விட்டு கீழே இறங்கி தப்பியோடினா்.
அப்போது, அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடா்பாக போலீஸாா், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.