முகப்பு
சென்னை

பொறியியல் சோ்க்கை: இரு நாள்களில் 42,114 விண்ணப்பங்கள் பதிவு

Updated On : 7 மே, 2024 at 8:22 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இரு நாள்களில் 42,114 போ் விண்ணப்பித்துள்ளனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணையவழியில் நடத்தப்படவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 42,114 மாணவ, மாணவிகள் ( செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி) பதிவு செய்துள்ளனா். அதில் 16,180 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். மேலும், 5,555 போ் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இணைய வசதியில்லாதவா்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இதுகுறித்த சந்தேகம் இருப்பின் 01800-425-0110 எனும் எண் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.