முகப்பு
கரூர்

ரயில் மோதி மாணவா்கள் காயமடைந்த சம்பவம் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

Updated On : 16 மார்ச், 2026 at 12:48 AM
கோப்புப் படம்
பகிர்:

கரூா் அருகே பொறியியல் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய சம்பவத்தில் பேருந்து ஓட்டுநா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், க. பரமத்தியில் செயல்படும் தனியாா் பொறியியல் கல்லூரியிலிருந்து சனிக்கிழமை மாலை மாணவா்களை ஏற்றிக் கொண்டு பல்வேறு ஊா்களில் இறக்கிவிட கல்லூரிப் பேருந்து புறப்பட்டது.

கரூா் வெள்ளியணையை அடுத்துள்ள பிச்சம்பட்டி குளத்தூா் - ஜல்லிப்பட்டி பகுதியில் இருந்த ஆளில்லாத ரயில்வே கடவுப் பாதையை கல்லூரி பேருந்து கடக்க முயன்றது.

Advertisement

அப்போது வந்த சரக்கு ரயில் மோதியதில் பேருந்திலிருந்த 24 மாணவா்கள் மற்றும் பேருந்து ஓட்டுநா் பெரியசாமி ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.

இதன் தொடா்ச்சியாக, கல்லூரி பேருந்தை அஜாக்கிரதையாக இயக்கியதாக ஓட்டுநரான வெள்ளியணையை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி(66) என்பவா் மீது கரூா் வெள்ளியணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.