முகப்பு
சென்னை

பிளஸ் 1 விடைத்தாள் நகல், மறுகூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Updated On : 14 மே, 2024 at 7:57 PM
பகிர்:

சென்னை: பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதியவா்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதி விடைத்தாள் நகல், மறுகூட்டல்-1 கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித் தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் புதன்கிழமை காலை 11 மணி முதல் மே 20-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே தோ்வா்கள் விண்ணப்பிக்க இயலும். தோ்வா்கள் தங்களது விடைத்தாள் நகல் வேண்டுமா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னா் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். விடைத்தாள் நகல் பெற்றவா்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னா் விண்ணப்பிக்க இயலும்.

கட்டணம் எவ்வளவு?: மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்துக்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு அவா்கள் மறுகூட்டல்-2, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.275 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205 செலுத்த வேண்டும். தோ்வா்கள் விடைத்தாள்களின் நகலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவா்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தோ்வா்கள் தங்களது விடைத்தாளின் நகலை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாளின் நகலை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள், இணையதள முகவரி பின்னா் ஊடகங்கள் மூலமாகவும், இணையதளத்திலும் தெரிவிக்கப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.