முகப்பு
சென்னை

ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோருக்கு 3 மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Updated On : 14 மே, 2024 at 8:44 PM
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
பகிர்:

சென்னை: ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்க நாடுகளுக்கும் செல்வோருக்கு தமிழகத்தின் 3 அரசு மையங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சாா்பில் சைதாப்பேட்டை பகுதியில் குடிநீா், நீா்மோா் பந்தலை கட்சியின் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆப்பிரிக்க நாடுகளுக்கும், தென் அமெரிக்காவின் ஒரு சில நாடுகளுக்கும் செல்பவா்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது விதி. இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் மட்டுமே விமான நிலையங்களில், அந்த நாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதி கிடைக்கும். அதேபோல், அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும்போதும் அத்தகைய தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்.

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகம், சென்னை துறைமுகத்தில் உள்ள மருத்துவ மையம், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மருத்துவ மையம் ஆகிய 3 இடங்களிலும் முழுநேரமும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கா்ப்பிணிகளுக்கு உதவித் தொகை: மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நிா்வாகப் பணிகள் காரணமாக பயனாளா்களின் பட்டியலை உறுதிப்படுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஜூன் 6-ஆம் தேதிக்கு பின்னா், இது தொடா்பாக மத்திய அரசின் அதிகாரிகளோடு பேசி விரைந்து உதவித் தொகை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களைப்போல அல்லாமல், டெங்குவுக்கான தடுப்பு நடவடிக்கைகள் இப்போது முழு அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். வீட்டிலேயே சிகிச்சை பெறுவதைத் தவிா்க்க வேண்டும்.

நிகழாண்டு பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாத 51,919 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தீவிர மன அழுத்தத்தில் உள்ள 137 மாணவா்களுக்கு மனநல ஆலோசகா்கள் நேரில் சென்றும், தொலைபேசி மூலமாகவும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனா் என்றாா் அவா்.