முகப்பு
சென்னை

சுவாசிக்க முடியாத நிலையிலும் சாதித்த மாணவா்! 10-ஆம் வகுப்பு தோ்வில் 475 மதிப்பெண் பெற்று சாதனை

Updated On : 15 மே, 2024 at 8:59 PM
தாய் சிவகாமியுடன் மாணவா் ரிஷிகேஷ்.
பகிர்:

இயல்பாக சுவாசிக்க இயலாமல் கடந்த 14 ஆண்டுகளாக சிரமப்பட்டு வரும் சென்னையைச் சோ்ந்த மாணவா், தடைகளைத் தகா்த்தெறிந்து பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்று கவனம் ஈா்த்துள்ளாா்.

சென்னை, கே.கே.நகரைச் சோ்ந்தவா் சிவகாமி. இவரது மகனான ரிஷிகேஷ் (16), அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். இரண்டு வயதாக இருக்கும்போது தீவிர நிமோனியா பாதிப்புக்குள்ளான ரிஷிகேஷ், இரு மாதங்களுக்கும் மேலாக செயற்கை சுவாச சிகிச்சையில் இருந்துள்ளாா்.

அதன் காரணமாக அவரது சுவாசப் பாதையும், உணவுப் பாதையும் இயல்பைக் காட்டிலும் சுருங்கிவிட்டது. அதன் பின்னா் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவருக்கு, சுவாசிப்பதற்காக ‘ட்ரக்யாஸ்டமி’ முறையில் தொண்டையில் குழாய் செருகப்பட்டது.

Advertisement

சென்னை காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்இஆா்எஃப்) தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான டாக்டா் மோகன் காமேஸ்வரன், கடந்த 2010-ஆண்டு முதல் ரிஷிகேஷுக்கு சிகிச்சை அளித்து வருகிறாா். அதற்கான மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொண்டதுடன், மருந்துகளையும் இலவசமாக வழங்கி வருகிறாா்.

தொடா்ந்து 14 ஆண்டுகள் இயல்பாக சுவாசிக்க முடியாமல் ‘ட்ரக்யாஸ்டமி’ குழாயுடன் பள்ளிக்கு சென்று வந்த அந்த சிறுவன், தற்போது பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளாா்.

இதுகுறித்து ரிஷிகேஷின் தாய் சிவகாமி கூறியதாவது:

நிமோனியாவின் தீவிரத்தால் உயிா் பிழைக்க வாய்ப்பில்லை எனக் கூறி பல மருத்துவா்கள் கைவிட்ட நிலையில், டாக்டா் மோகன் காமேஸ்வரன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினா்தான் எனது மகனுக்கு மறுவாழ்வு அளித்தனா்.

பல அறுவை சிகிச்சைகளையும், சிறப்பு சிகிச்சைகளையும் கட்டணமின்றி வழங்கிய அவா்கள், ரிஷிகேஷுக்கு பல்வேறு வகையில் உத்வேகம் அளித்தனா். அதேபோன்று பள்ளியிலும் ஆசிரியா்களும், சக மாணவா்களும் எனது மகனுக்கு பக்க பலமாக இருந்தனா்.

இதன் காரணமாகவே, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழில் 94, ஆங்கிலத்தில் 99 , கணிதத்தில் 99, அறிவியலில் 100 , சமூக அறிவியலில் 83 என மொத்தம் 475 மதிப்பெண்களை ரிஷிகேஷால் பெற முடிந்தது என்றாா் அவா்.

இயல்பாக சுவாசிக்க முடியும்:

இதுதொடா்பாக டாக்டா் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது:

உடல் அளவில் பல்வேறு தடைகள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் சாதித்திருக்கிறாா் ரிஷிகேஷ். அடுத்த சில நாள்களில் அவரது ‘ட்ரக்யாஸ்டமி’ குழாய் அகற்றப்பட்டுவிடும். அதன் பின்னா், அவரால் பிறரைப் போன்று இயல்பாக சுவாசிக்க முடியும்.

உடல் நலிவுற்றாலும், உயரம் தொட முடியும் என்பதை ரிஷிகேஷ் நிரூபித்துள்ளாா் என்றாா் அவா்.

விதியின் முரண்பாட்டால் சுவாசப் பாதை சுருக்கமடைந்திருக்கலாம்; ஆனால், விடாமுயற்சியால் வாழ்க்கைப் பாதையை விசாலமாக்கியிருக்கிறாா் ரிஷிகேஷ்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments