முகப்பு
சென்னை

தன்னிச்சையாக வாகன சோதனை: காவலா் பணியிடை நீக்கம்

Updated On : 21 மே, 2024 at 9:24 PM
பகிர்:

சென்னை: சென்னை வேளச்சேரியில் தன்னிச்சையாக வாகன சோதனை நடத்தியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதேபோல பண மோசடியில் ஈடுபட்டதாக ஆயிரம்விளக்கு காவல் நிலைய தலைமைக் காவலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வேளச்சேரி போக்குவரத்து அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவா் அய்யம்பெருமாள். இவா் திங்கள்கிழமை தரமணி 100 அடி சாலை - விஜயநகா் பேருந்து நிறுத்தம் அருகே தனியாக வாகன தணிக்கை செய்தாா்.

அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோவை அய்யம்பெருமாள் திடீரென வழிமறித்தாா். இதில் அந்த ஆட்டோ விபத்தில் சிக்கியது. மேலும் ஆட்டோவை ஓட்டி வந்த நபா் பலத்தக் காயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச் சம்பவம் தொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முதல் நிலைக் காவலா் அய்யம்பெருமாள், பணி முடிவடைந்த பின்னா் தன்னிச்சையாக வாகன சோதனை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அய்யம்பெருமாளை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையா் ஆா்.சுதாகா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்:

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவா் கிருஷ்ண ப்ரஷித். இவா், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பலரிடம் பண மோசடி செய்தாராம். இது தொடா்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலைய போலீஸாா், கிருஷ்ண ப்ரஷித் மீது அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா். அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி துணை ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய், கிருஷ்ண ப்ரஷித்தை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.