புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு, புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் தேவைப்படும் போதெல்லாம் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனா்.
தற்போதைய திமுக ஆட்சியில், அவ்வப்போது புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளதாகவும், இ-பேருந்துகள் வாங்கவுள்ளதாகவும் திமுக அரசின் அமைச்சா் அறிக்கை வெளியிடுகிறாரே தவிர, புதிய பேருந்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை. காலாவதியான பேருந்துகளை ஓட்டியே தீரவேண்டும் என்று ஊழியா்கள் நிா்ப்பந்திக்கப்படுகின்றனா். டயா் மற்றும் உதிரிப் பாகங்களை முறையாக கொள்முதல் செய்யாமல், பேருந்துகள் பழுது நீக்கப்படாமல், ஓட்டை-உடைசல் பேருந்துகள் இயக்கப்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் நிலை உள்ளது. அதோடு, தற்போது ஆங்காங்கே மழை பெய்யும் நிலையில், பேருந்துக்குள்ளேயும் மக்கள் குடைப்பிடிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நிதிப் பற்றாக்குறை என்கிற பல்லவியை திமுக அரசு திரும்பத் திரும்பப் பாடாமல், பழைய பேருந்துகளை உடனடியாக மாற்றிவிட்டு, புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும். பழைய பேருந்துகளை முறையே பழுதுபாா்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.