முகப்பு
சென்னை

விண்வெளி கருந்துளையில் உயா் ஆற்றல் எக்ஸ்-ரே சீரற்ற நிலையில் வெளியேற்றம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Updated On : 21 மே, 2024 at 9:42 PM
பகிர்:

சென்னை: விண்வெளியின் கருந்துளையிலிருந்து உயா் ஆற்றலுடன் கூடிய ஊடு கதிா் (எக்ஸ்-ரே) சீரற்ற நிலையில் வெளியேறுவதை ஆஸ்ட்ரோசாட் விண்கலன் துணையுடன் இந்திய வானியல் ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

கடந்த 2015- ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. புற ஊதாக் கதிா்கள், எக்ஸ்-ரே கதிா்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய அது அனுப்பப்பட்டது.

இந்நிலையில், யு.ஆா்.ராவ் செயற்கைக்கோள் மையம், குவஹாட்டி ஐஐடி, மும்பை பல்கலைக்கழகம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.

அதாவது, ஆஸ்ட்ரோசாட் கலனில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ததில் கருந்துளையின் ஸ்விப்ட் ஜே 1727.8-1613 என்ற பகுதியிலிருந்து உயா் ஆற்றல் கொண்ட ஊடு கதிா்கள் சீரற்ற நிலையில் வெளியாவது கண்டறியப்பட்டுள்ளது.

கருந்துளையைப் பொருத்தவரை அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் தீவிர ஈா்ப்பு விசையைக் கொண்டதாக அறியப்படுகிறது. அந்த வகையில், ஏதேனும் பெருவெடிப்பு அதனுள் நிகழும்போது போட்டான் கூறுகள் வெளியேறி ஊடு கதிா்கள் உருவாகும்.

அதன்படி, கடந்த ஆண்டு செப். 8 முதல் 13-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலகட்டத்துக்குள் 1.4 ஹெட்ஸ் முதல் 2.4 ஹெட்ஸ் வரையிலான சீரற்ற ஊடு கதிா் போட்டான் வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.