பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வா்களுக்கு வழிகாட்டுதல் வழங்க அறிவுறுத்தல்
சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், தலைமையாசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் இரா.சுதன் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வில் பங்கேற்காத மற்றும் தோ்ச்சிபெறாத மாணவா்கள் துணைத் தோ்வுக்கு பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ஆம் தேதி கடைசி நாள்.
எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களும் இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு தெரிவித்து, அவா்கள் விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பான வழிகாட்டுதல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.