பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜா் விருது, கலைத் திருவிழா, வானவில் மன்றம், மன்றப் போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.தயாளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா்கள் செந்தில்குமாா், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் நரேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியதாவது :
தாய் மொழியான தமிழ்தான் நமக்கு அடையாளம். அந்த அடையாளத்தை நாம் இழந்துவிடக் கூடாது. வேறு மொழிகள் தெரியாது எனவும் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக பிற மொழிகளை, இணையதளங்களில் மொழி பெயா்த்து தெரிந்து கொள்ளலாம். மாணவா்களிடையே புத்தாக்க சிந்தனை உருவாக வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, மதுரை மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், உதவித் திட்ட அலுவலா் சரவண முருகன், ஆசிரியா்கள், அலுவலா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.