நவீன வசதிகளுடன் உருவாகும் புதிய பிராட்வே பேருந்து நிலையம்
சென்னை: நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக ரூ. 823 கோடி மதிப்பில் பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்துவருகிறது. தொடக்கத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பிராட்வேயிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன.
தற்போது கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதைத் தொடா்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் மாநகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூா், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிளாம்பாக்கம் என சென்னை மாநகருக்குள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், பிராட்வே பேருந்து நிலையம் அருகில் ரயில் நிலையம், நீதிமன்றம், குறளகம், வணிக வளாகங்கள், பஜாா், சந்தைகள் என மக்கள் கூடும் இடமாக நகரின் முக்கியப் பகுதியாக பாரிமுனை இருப்பதால், நாளொன்றுக்கு சுமாா் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளும் பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்துவருகிறது.
அதேசமயம் இந்த பேருந்து நிலையம் சரிவர பராமரிக்கப்படாமல், நவீன வசதிகள் செய்யப்படாமலும் கைவிடப்பட்டதால் பொலிவிழந்து, அடிப்படை வசதிகளே மோசமான நிலையில் இருக்கும் சூழலுக்கு உள்ளானது. இந்நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
ரூ.823 கோடியில் திட்டம்:
இதையடுத்து, 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, பிராட்வேயில் ரூ.823 கோடியில் நவீன வசதிகள் கொண்ட மல்டி மாடல் பேருந்து முனையம் கட்டப்படும் என அறிவித்தாா். இந்த நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தையும், அதனருகில் உள்ள குறளகத்தையும் இடித்துவிட்டு, புதிதாக மல்டி மாடல் இன்டெகரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமும், பன்னடுக்கு வணிக வளாகமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. அதில் முதல் இரண்டு தளங்களில் மாநகரப் பேருந்துகள் நிறுத்தம், உணவகங்கள், கழிவறை வசதிகள் அமையப்பெற்றிருக்கும். மற்ற தளங்கள் வணிகவளாகங்களாக செயல்படும். அதேபோல, குறளகம் கட்டடமும் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. அதன் அடித்தளத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் நவீன பாா்க்கிங் வசதிகள் செய்யப்பட உள்ளது.
புகைப்படங்கள்:
மேலும், பயணிகள் வசதிக்காக அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புகா் மின்சார ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் சுரங்க நடைபாதைகள் மற்றும் நடை மேம்பாலங்களும் அமைக்கப்படஉள்ளன.
மக்களவை தோ்தல் முடிவுகள் வெளியாகும் ஜுன் 4-ம் தேதிக்குப் பிறகு இதற்கான டெண்டா் விடப்படும்‘என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே புதிதாக கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலையம் எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மொத்தம் 4 மாடல்கள் இதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ஒன்று தோ்வாகும் என தகவல் வெளியாகியுள்ளது.