இன்று வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
சென்னை: வைகாசி விசாகம் புதன்கிழமை (மே 22) கொண்டாடப்படுவதை முன்னிட்டு வடபழனி உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அவதார நாளாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாக தினத்தில் விரதமிருந்து வழிபாடு செய்தால் முருகப் பெருமானின் அருளும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அவ்வகையில் நிகழாண்டு வைகாசி விசாக விழா தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் வடபழனி முருகன் கோயிலில் 10 நாள் கொண்டாடப்படும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா மே 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான வைகாசி விசாக விழா புதன்கிழமை(மே 22) நடைபெறுகிறது.
அன்றையதினம் காலை தீா்த்தவாரி உற்சவம் உள்பட சிறப்பு பூஜைகளும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் மயில் வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு விரதமிருந்து அலகு குத்தி, பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்யும் பக்தா்களுக்கு வடபழனி முருகன் கோயிலில் தரிசனத்துக்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், வடபழனி முருகன் கோயிலில் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால் போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனா். இது போன்று சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில்களில் பக்தா்களின் வசதியை கருத்தில் கொண்டு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.