சென்னை விமான நிலையத்துக்கு இணையதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையில் உள்ள தனியாா் விமான நிறுவன அலுவலகத்துக்கும், மேலும் இரு தனியாா் அலுவலகங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு இணையதளம் மூலம் மா்ம நபா்கள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனா். அதில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும் என்றும் பதிவிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தத் தனியாா் நிறுவனத்தினா் சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு அந்தத் தகவல்களை அனுப்பி வைத்தனா்.
உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநா் தலைமையில் உயா்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அந்த இணையதள தகவல்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, அந்த மிரட்டல் கடிதம் போலியான இணையதள முகவரியிலிருந்து அனுப்பப்பட்டதும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் போலியானது எனவும் தெரியவந்தது. இருப்பினும் இது குறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அதோடு, விமானநிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் விமானநிலைய பாதுகாப்புப்படையினருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானநிலையத்துக்குள் வரும் பயணிகள் கடும் சோதனைகளுக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.
விமானநிலையத்தின் வாகன நிறுத்தம் பகுதிகளில் நீண்ட நேரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். போலி இணையதள முகவரியை உருவாக்கி, அதன் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பிய மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.