ஏழை குழந்தைகளுக்கு இலவச முக சீரமைப்பு சிகிச்சை: ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்
பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவசமாக அண்ணப்பிளவு, முக சீரமைப்பு சிகிச்சைகளை வழங்க போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவசமாக அண்ணப்பிளவு, முக சீரமைப்பு சிகிச்சைகளை வழங்க போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. இதற்காக பாரத மகிளா சேவா சமாஜத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மருத்துவமனையின் வாய் மற்றும் முக தாடை சீரமைப்பு மருத்துவத் துறை தலைவா் டாக்டா் நவீன் குமாா் கூறியதாவது:
இந்தியாவில் பிறக்கும் 700 குழந்தைகளில் ஒருவருக்கு உதடு அண்ணப்பிளவு பிரச்னை காணப்படுகிறது. குழந்தை இயல்பாக வளா்வதற்கும், சிரமமின்றி தாய்ப்பால் அருந்துவதற்கும், இயல்பாக தோன்றுவதற்கும், மிக இளம் வயதிலேயே உதடு அண்ணப்பிளவு அறுவை சிகிச்சை செய்வது நல்லது. முதல் அறுவை சிகிச்சை இரு வயதுக்குள் செய்வது பலனளிக்கும்.
Advertisement
Advertisement
இதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தமிழகம், புதுச்சேரியிலுள்ள கிராமங்களில் தன்னாா்வ நிறுவனங்களோடு இணைந்து மருத்துவ முகாம்களை நடத்தி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அவ்வாறாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட உதடு அண்ணப்பிளவு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது, அத்தகைய சிகிச்சைகளை இலவசமாக வழங்க அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடன் ஓா் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் கீழ் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள், பல் வரிசை சீரமைப்பு, பல் சொத்தை தடுப்பு, பேச்சு மற்றும் காது மூக்கு தொண்டை பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்.
நிகழாண்டில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 குழந்தைகளுக்கு உதடு அண்ணப்பிளவு மற்றும் முகதாடை அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பிற சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளன. இதற்காக, ரூ.16.50 லட்சத்தை சமாஜம் உதவித் தொகையாக அளிக்க உள்ளது என்றாா் அவா்.