போக்ஸோவில் கைதானவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு உத்தரவு
சென்னை: போக்ஸோ வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு தனியாா் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.
போக்ஸோ வழக்கில் தண்டிக்கப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்தவருக்கு தனியாா் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய 3 மாத கால விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி, அவரது மகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, தற்போது மனுதாரரின் தந்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பெயா் பெற்ற மருத்துவமனை என்பதால், மனுதாரா் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறி, ஸ்டான்லி மருத்துவமனையில் மனுதாரரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டனா்.
மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புக்காக செல்லும் மனுதாரருக்கோ, தாய்க்கோ எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.