முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப்போட்டிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்கி வைக்கிறாா்.
மாவட்ட அளவிலான போட்டிகளை கடந்த செப். 10-ஆம் தேதி சிவகங்கையில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள 33,000 போ் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டு உள்ளனா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் நடத்தப்படும் இந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அக். 4-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னை, கோயம்பத்தூா், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்படுகின்றன.
மொத்தம் 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா்.
இதுதொடா்பாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியது:
முதல்வா் கோப்பை என்பது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும்,
இந்த முயற்சி ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் பல திறமையான விளையாட்டு வீரா்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. அவா்களில் சிலா் சொந்த மண்ணில் கடைசியாக நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டியில் மாநிலத்திற்காக பதக்கங்களை வென்றனா். அவா்களின் செயல்திறனால் அந்த போட்டியில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உதவியது.
ரூ.37 கோடி பரிசுத் தொகை:
தனி நபா் பிரிவில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். இம்முறை 4-ஆவது இடத்தை பிடிப்பவா்களுக்கு 3வது இடத்தை பிடிப்பவருக்கு வழங்கப்படும் அதே தொகை பரிசாக வழங்கப்பட உள்ளது. குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயா் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடி வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 27,000 போ் கலந்து கொண்டனா். 15 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தன. இம்முறை விளையாட்டுகளின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இம்முறை கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜூடோ, கோ-கோ, குத்துச்சண்டை, டிராக் சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட 11 விளையாட்டுகள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.