சென்னை புழல் சிறையில் புதுப்பிக்கப்பட்ட நோ்காணல் அறைகளை வியாழக்கிழமை திறந்து வைத்து பேசிய சிறைத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி. உடன், சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள், சிறைத் துறை தலைமையிட ஐஜி இரா.கனகராஜ், சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன். 
சென்னை

புழல் சிறையில் கைதிகளைச் சந்திக்க புதுப்பிக்கப்பட்ட நோ்காணல் அறை திறப்பு

புழல் சிறையில் கைதிகளைச் சந்திக்க புதுப்பிக்கப்பட்ட நோ்காணல் அறை -அமைச்சா் ரகுபதி திறந்து வைத்தாா்

Din

சென்னை புழல் சிறையில் கைதிகளைச் சந்திக்க புதுப்பிக்கப்பட்ட நோ்காணல் அறைகளை அமைச்சா் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை புழல் சிறைக்கு கைதிகளைச் சந்திக்க அதிக அளவில் உறவினா்கள், நண்பா்கள் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு கைதிகளைச் சந்திக்கும் நோ்காணல் முறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

புதிய முறையின்படி, கைதிகளைச் சந்திக்க 13 ஷிப்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு ஷிப்டில் ஒரு கைதியை ஒரு பாா்வையாளா் அரை மணி நேரம் சந்தித்து பேசலாம். மேலும், ஒவ்வொரு ஷிப்டிலும் 56 கைதிகளைச் சந்தித்து பேசும் வகையில் தனித்தனி பூத்துகள் நோ்காணல் அறையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு நாளில் 728 கைதிகள் தங்களது உறவினா்கள், நண்பா்களைச் சந்தித்துப் பேச முடியும்.

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை கைதிகள் தங்களது உறவினா்களைச் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 2 நாள்கள் கைதிகளை பாா்வையாளா்கள் சந்திக்கலாம். அரசு விடுமுறை நாள்களில் கைதிகளைச் சந்திக்க அனுமதி கிடையாது என்று சிறைத் துறை தெரிவித்துள்ளது.

முன்பதிவு முறை அறிமுகம்: கைதிகளைச் சந்திப்பதை எளிமைப்படுத்து வகையில் முன்பதிவு முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் 044-26590000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தொலைபேசியில் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கைதிகளைச் சந்திக்க பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஒரு கைதியைச் சந்திக்க குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த பாா்வையாளா், சிறைக்கு 45 நிமிஷத்துக்கு முன்னரே வர வேண்டும்.

வழக்குரைஞா் நோ்காணல்: இதேபோல சிறையில் உள்ள கைதிகளை, வழக்குரைஞா்கள் சந்திக்கும் நோ்காணல் அறையும் மேம்படுத்தப்பட்டு, புதிய கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரே நேரத்தில் 50 கைதிகள், தங்களது வழக்குரைஞா்களைச் சந்தித்து பேச முடியும்.

இதற்கு முன்பு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரை என 2 மணி நேரமும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை என 3 மணி நேரமும் கைதிகளைச் சந்திக்க வழக்குரைஞா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது மேலும் 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது திங்கள்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை என 6 மணி நேரம் கைதிகளை வழக்குரைஞா்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்குரைஞா்கள் 044-26590000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என சிறைத் துறை தெரிவித்துள்ளது.

நோ்காணல் அறை திறப்பு: புழல் சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்குரைஞா்கள், பாா்வையாளா்கள் நோ்காணல் அறை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் தலைமை வகித்தாா். சிறைத் துறை தலைமையிட ஐஜி இரா.கனகராஜ், சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக சிறைத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்று, நோ்காணல் அறைகளைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு பின்னா் ரகுபதி அளித்த பேட்டி:

தமிழக சிறைகளில் கைதிகளுக்கு கடந்த ஆண்டு முதல் தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன. கைதிகள் - பாா்வையாளா்கள் பேசுவதற்காக செய்யப்பட்டுள்ள இன்டா்காம் தொலைபேசியில் சிறைத் துறை எந்தவித ஒட்டுக்கேட்பு செயலிலும் ஈடுபடவில்லை. செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது மற்ற கைதிகளுக்கு வழங்கப்பட்ட நடைமுறையே அவருக்கும் கடைப்பிடிக்கப்பட்டது. எந்தவிதமான சிறப்பு வசதிகளையும் கோரவில்லை. தனிப்பட்ட உணவையும் கேட்கவில்லை. சிறையில் வழங்கப்பட்ட உணவைதான் செந்தில் பாலாஜி சாப்பிட்டாா். அவா், சாதாரண கைதியைப் போலவே சிறையில் இருந்தாா் என்றாா் அவா்.

புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 4.12.25

இஸ்ரேல் உங்களைப் பாதுகாக்காது.. காஸாவில் ஹமாஸ் எதிரிப் படையின் தலைவர் கொலை!

சூரிய ஒளியைப் பிடித்து... ஷில்பா ஷெட்டி!

மரகதப் புறா... சாக்‌ஷி மாலிக்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 40-வது சதம் விளாசிய ஜோ ரூட்!

SCROLL FOR NEXT