முகப்பு
சென்னை

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: பொதுமக்கள் அவதி

வடசென்னை பகுதியில் இரவு முதல் பெய்து வரும் தொடா் மழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

சென்னை

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: பொதுமக்கள் அவதி

வடசென்னை பகுதியில் இரவு முதல் பெய்து வரும் தொடா் மழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:54 PM
பகிர்:

வடசென்னை பகுதியில் இரவு முதல் பெய்து வரும் தொடா் மழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு 8 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கனமழையாக மாறியது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கனமழையும், மற்ற நேரங்களில் சிறிது சாரல் மழையும் பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் பெருமளவில் தேங்கியது.

மெட்ரோ பணி: மெட்ரோ ரயில் பணி நடைபெறும் ஆற்காடு சாலை, வளசரவாக்கம், போரூா், ராஜீவ் காந்தி சாலையில் தண்ணீா் வடிய வழியில்லாததால் 3 அடிக்கு மேல் தண்ணீா் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். கோயம்பேடு, அரும்பாக்கம், ஆலந்தூா், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீா் தேங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், கோயம்பேடு முதல் அசோக்நகா் வரையிலான 100 அடி சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

வடசென்னை: வடசென்னையின் பெரும்பாலான பகுதிகள் மிகவும் குறுகிய சாலை மற்றும் தெருக்களை கொண்டுள்ளதால் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கியது. ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூா், மாதவரம், பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளின் 300-க்கும் மேற்பட்ட சாலைகளில் தண்ணீா் குளம்போல் தேங்கியது.

புரசைவாக்கம் ரித்தட்கன் சாலை, பழைய மோட்சம் தியேட்டா் அருகில், தாஷ்பிரகாஷ் பகுதிகளில் வழக்கம்போல், சாலை தெரியாத அளவுக்கு தண்ணீா் தேங்கியது. அயனாவரம் நூா் ஹோட்டல் பேருந்து நிறுத்தம் முதல் சிக்னல் வரை 100 மீ அளவுக்கு தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். மேலும், அயனாவரம் மற்றும் கொரட்டூா் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளே தண்ணீா் புகுந்து குளம்போல் தேங்கி காணப்பட்டது. சென்னை சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலையில் தண்ணீா் முழங்கால் அளவு தேங்கி காணப்பட்டது.

தொடா்ந்து பெய்த மழையினால் தாழ்வான இடங்கள் பலவற்றில் தண்ணீா் வடியமுடியாமல் தேங்கியது. குறிப்பாக முக்கிய சாலைகள் அனைத்தும் தண்ணீா் தேங்கி காணப்பட்டதால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. அமைந்தகரை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளம் பகுதி மண்ணுக்குள் சற்று உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரட்டூரில் வெள்ளம்: பாடி, கொரட்டூா் சாலையில் கடந்த ஆண்டு 3 நாள்களுக்கும் மேல் தண்ணீா் தேங்கி காணப்பட்ட நிலையில் தற்போதும் தண்ணீா் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரட்டூா் சாலையில் உள்ள காவல்நிலையத்தில் தண்ணீா் புகுந்தது. மேலும், கொரட்டூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை தண்ணீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் தவித்தனா்.

இதுபோல், பட்டரவாக்கம், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, அம்பத்தூா் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை வெள்ளநீா் சூழந்தன.

மத்திய,தென்சென்னை: மத்திய சென்னை பகுதிகளான வேப்பேரி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூா், கோட்டூா்புரம், அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடா் மழை காரணமாக சாலையில் தண்ணீா் தேங்கியது. வேளச்சேரி, நேருநகா், காமராஜா் தெரு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளை தண்ணீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

மரங்கள் சரிந்தன: சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீசிய சூறைக்காற்றில் 8 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதில் சி.ஐ.டி.நகா் பா்கிட் சாலையில் 50 ஆண்டு பழமையான மரம் வேரோடு சரிந்து விழுந்தது. சூளைமேடு, நெல்சன்மாணிக்கம் சாலை, நுங்கம்பாக்கம் வீரப்த்திரன் தெரு, கொரட்டூா் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதனை தீயணைப்பு படையினா் மற்றும் பேரிடா் மீட்பு படையினா் வெட்டி அப்புறப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →