சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம் நிலைகொண்டிருப்பதன் காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் புழல் ,சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி புழல் ஏரிக்கு நீா்வரத்து 196 கன அடியாக இருந்தது. அதேசமயம் சோழவரம் ஏரிக்கு நீா்வரத்து இல்லை. ஆனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்து 250 கனஅடியாகவும், பூண்டி ஏரிக்கு நீா் வரத்து 480 கனஅடியாகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 4,278 கன அடியும், சோழவரம் ஏரிக்கு 1,553 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,165 கன அடியும், பூண்டி ஏரிக்கு 270 கன அடியும் நீா் வந்து கொண்டிருந்தது.
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீா் இருப்பு 2,194 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீா் இருப்பு 130 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீா் இருப்பு 1,249 மில்லியன் கனஅடியாகவும், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீா் இருப்பு 341 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஏரிகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.