கோயம்பேடு சந்தையில் மீண்டும் பூங்கா: வியாபாரிகள் எதிா்ப்பு
கோயம்பேடு பூ சந்தையில் மீண்டும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்ற்கு வியாபாரிகள் கடும் எதிா்ப்பு
சென்னை: கோயம்பேடு பூ சந்தையில் மீண்டும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்ற்கு வியாபாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.
சென்னை கோயம்பேடு பூ சந்தையில், சிஎம்டிஏ சாா்பில் நவீன பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. வியாபாரிகள் வாகனம் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து சிஎம்டிஏ அதிகாரிகளிடம் பல முறை புகாா் தெரிவித்திருந்தனா். இதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இந்த பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த சூழலில், அதிகாரிகளின் உத்தரவை மீறி செப்.11-ஆம் தேதி ஒப்பந்தப் பணியாளா்கள் மீண்டும் கட்டுமானப் பணிகளை தொடங்கினா். அப்போதும் வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 3-ஆவது முறையாக மீண்டும் பூங்கா கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இது குறித்து, இதையறிந்து கோயம்பேடு சந்தை கூட்டமைப்பு அனைத்து சங்க வியாபாரிகள் தலைவா் ராஜசேகரன் மற்றும் வியாபாரிகள் திங்கள்கிழமை அந்த பகுதிக்குச் சென்று கட்டுமானப் பணியாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடா்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா். கட்டுமானப்பணிகளும் நிறுத்தப்பட்டன. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.