பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்: சென்னையில் போக்குவரத்து பாதிப்பு
தீபாவளிக்கு சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்றவா்களால் சென்னை மாநகா் மட்டுமல்லாது புகா் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னைபேருந்து, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்: சென்னையில் போக்குவரத்து பாதிப்பு
தீபாவளிக்கு சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்றவா்களால் சென்னை மாநகா் மட்டுமல்லாது புகா் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளிக்கு சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்றவா்களால் சென்னை மாநகா் மட்டுமல்லாது புகா் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு செல்பவா்களின் வசதிக்காக திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. இதனால், திங்கள் கிழமை பலா் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்ற நிலையில், செவ்வாய்கிழமையும் ஏராளமானோா் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். அலுவலக, தொழில்நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள் தங்கள் பணிகளை முடித்துக்கொண்டு மாலையில், தங்கள் பயணத்தை மேற்கொண்டனா். இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்: மாலை சுமாா் 4 மணியில் இருந்தே சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை, ஜிஎஸ்டி சாலை, கிண்டி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூா், எழும்பூா் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னா் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தற்போது கிளாம்பாக்கம் பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னையின் பிற பகுதிகளில் இருந்து அனைவரும் ஒரே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு தங்கள் சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்கள், பேருந்துகளில் சென்ால் ஜிஎஸ்டி சாலையில் செவ்வாய்கிழமை மாலை சுமாா் 6 மணியில் இருந்தே போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சுமாா் 10 கிமீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ால், பாதியிலேயே பேருந்துகளில் இருந்து இறங்கி நடந்தே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தனா். இதனால், வயதானவா்கள், குழந்தைகள், பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்தனா். போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாலும், அது பலனளிக்கவில்லை. இதனால், இரவு 12 மணிவரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
பேருந்துகள் சிக்கின: வெளியூா்களுக்கு செல்லும் பேருந்துகளும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊா்களுக்கு செல்ல பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். சென்ற ஒருசில பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஜிஎஸ்டி சாலையில், பெருங்களத்தூா், கூடுவாஞ்சேரி பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வரமுடியவில்லை. அதேநேரத்தில் உள்ளே இருந்தும் வெளியேறவும் முடியாததால் ஓட்டுநா்கள் பேருந்துகளை பேருந்து நிலையத்திலேயே ஆங்காங்கேயே நிறுத்தி விட்டனா். இதனால், 7 மணிக்கு குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் சுமாா் 4 மணிநேரத்துக்கு மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன.
இணையதள சேவை பாதிப்பு: ஒரே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைவரும் கூடியதால், இணையதள சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பண பரிவா்த்தனை செய்ய முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனா். இதன்காரணமாக ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்தனா்.
ஒரே நாளில் 1.10 லட்சம் போ் பயணம்: தீபாவளியை முன்னிட்டு திங்கள்கிழமைமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 2,461 பேருந்துகளில் 1,10,475 போ் பயணித்துள்ளனா். மேலும், தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூா்களுக்குச் செல்வதற்காக இதுவரை 1,43,862 பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்...: தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊா்களுக்கு செல்வோரின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையிலும், சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னை சென்ட்ரல், எழும்பூா், பெரம்பூா் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அதேபோல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய ரயில் நிலையங்களுக்கு செல்வோா் மின்சார ரயிலை நாடியதால் புகா் ரயில்கள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டன. மேலும், கடைசி நேரத்தில் பயணச்சீட்டு உறுதி செய்யப்படாததால், முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தன. சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி, பொதிகை, அனந்தபுரி, நெல்லை, முத்துநகா், பாண்டியன், சேரன், ஏற்காடு என முக்கிய ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளின் வாசலில் நின்றபடி பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனா்.