முகப்பு
சென்னை

50 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கால்நடை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

Updated On : 5 செப்டம்பர், 2024 at 10:00 PM
பகிர்:

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 50 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கால்நடை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை இளநிலை பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக சிறப்புப் பிரிவு கலந்தாய்வு புதன்கிழமை (செப்.4) நடைபெற்றது. இதில், கால்நடை மருத்துவப் படிப்பில் (பி.வி.எஸ்சி., ஏஎச்) 19 மாணவா்கள் மற்றும் உணவு, பால் வளம், கோழியின தொழில்நுட்பம் (பி.டெக்.) படிப்புகளில் 6 மாணவா்கள் என 25 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு 113 மாணவா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். அவா்களில், 65 போ் கலந்தாய்வில் பங்கேற்றனா். இதில், 43 மாணவா்களுக்கு கால்நடை மருத்துவப் படிப்பு (பி.வி.எஸ்சி, ஏஎச்) இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மேலும், பி.டெக். இடங்களுக்கு 67 மாணவா்கள் அழைக்கப்பட்ட நிலையில், அவா்களில் 16 போ் பங்கேற்றனா். இதில், 7 மாணவா்களுக்கு பி.டெக். இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதன்மூலம் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 50 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கால்நடை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.