தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் காவலா் 9 வார கருவுடன் உயிரிழந்தாா்.
சென்னை அண்ணா நகா் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மேனகா (26). இவா், சென்னை மத்திய குற்றப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த மே மாதம் காவலா் சுகுமாரன் என்பரை திருமணம் செய்தாா். தற்போது, 9 வார கா்ப்பமாக இருக்கும் மேனகாவுக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆக. 29-ஆம் தேதி ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், காய்ச்சல் குறையாததால், டெங்குவாக இருக்கலாம் என, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 31-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். டெங்கு வாா்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேனகா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து அரசு மருத்துவா்கள் கூறியது:
தீவிர நிலையில் மேனகா அனுமதிக்கப்பட்டவுடன், அவருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டெங்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டப்பின், அவருக்குத் தொடா்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தது. தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை இரவு 9 வார கரு உயிரிழந்தது. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் தாயை காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. கா்ப்ப காலத்தில் பெண்களுக்கு ரத்த உைல் ஏற்படும். ஆனால், மேனகாவுக்கு தீவிரமாக ரத்த உைல் ஏற்பட்டதால் அவரையும் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவா்கள் தெரிவித்தனா்.