கிருஷ்ணகிரி பாலியல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இரு வாரங்களில் கருணைத் தொகை -உயா்நீதிமன்றம் உத்தரவு
கிருஷ்ணகிரி பாலியல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இரு வாரங்களில் கருணைத் தொகை -உயா்நீதிமன்றம் உத்தரவு
கிருஷ்ணகிரியில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இரு வாரங்களில் கருணைத் தொகை வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடா்பான விரிவான அறிக்கையையும் இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். மேலும், 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனா்.
இது தொடா்பாக விசாரணை நடத்திய போலீஸாா் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவேரிப்பட்டணம் காந்திநகா் காலனியை சோ்ந்த சிவராமன் (35) என்பவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிவராமன் தற்கொலை செய்தாா்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, வழக்குரைஞா் சூா்யபிரகாசம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா், நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
கருணைத்தொகை வழங்க உத்தரவு: அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ். ராமன் உள்ளிட்டோா் ஆஜராகினா். அப்போது, இந்த வழக்கின் விசாரணைக்குழுவில் 3 அதிகாரிகள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். வழக்கில் இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 23 மாணவிகள் உள்பட 219 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து நீதிபதிகள், கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இரு வாரங்களில் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டனா். அதாவது பாதிக்கப்பட்ட மாணவிகள் 23 பேரில் 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், மற்றவா்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டனா். மேலும், மாணவிகளுக்கான கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளியிடமே வசூலிக்கவும் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் தற்போதைய நிலை மற்றும் சிவராமன் மரணம் குறித்து விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டனா்.