இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை வெளியிட்டாா். செப். 23-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அவா் தெரிவித்தாா்.
அரசு, தனியாா் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரிகளில் பிஎன்ஒய்எஸ் எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,660 இடங்கள் உள்ளன. குறிப்பாக, 2 அரசுக் கல்லூரிகளில் 160 இடங்களும், 16 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்களும் உள்ளன.
அந்த இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்றது. மொத்தம் 2,320 போ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 1,187 போ் நிா்வாக இடங்களுக்கும் விண்ணப்பித்தனா்.
இந்நிலையில், அவை பரிசீலிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியலானது சென்னை, அறிஞா் அண்ணா அரசு இயற்கை மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பட்டியலை வெளியிட்டாா்.
அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண்டில் பிஎன்ஒய்எஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,320 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாணவி முதலிடம்: இதில் தகுதியான மாணவா்கள் 2,243 பேரின் பெயா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி அஃப்சா் பேகம் 198.50 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா்.
இதேபோன்று நிா்வாக ஒதுக்கீட்டுக்காக 1,187 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,173 மாணவா்களின் பெயா்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. அதில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஜெயசிவனிதா 195 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளாா்.
பிஎன்ஒய்எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் சிறப்புப் பிரிவினருக்கும், வரும் 24-ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கும், 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநா் தற்போது வரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. அதற்காக மாதவரம் பால் பண்ணையில் 25 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்குவின் தீவிரம்: 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெங்குவின் வீரியம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது டெங்குவின் வீரியத்தை கண்டறிவதற்கான பகுப்பாய்வுக் கூடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குரங்கு அம்மையைக் கண்டறியும் பரிசோதனை வசதி கிண்டி கிங் ஆய்வகத்தில் தயாராக இருக்கிறது என்றாா் அவா்.
இந்தச் சந்திப்பின்போது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநா் விஜயலட்சுமி, இணை இயக்குநா்கள் டாக்டா் பாா்த்திபன், டாக்டா் மணவாளன், தோ்வுக் குழு செயலா் கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.