தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையையொட்டி திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முக்கியமாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், பாலியல் பலாத்கார முயற்சி வழக்குகள் உள்ளிட்டவை கடந்த 2024-ஆம் ஆண்டு 471 பதிவாகியுள்ளன. ஆனால் இது கடந்த 2023-ஆம் ஆண்டு 406 வழக்குகளும், 2022-ஆம் ஆண்டு 442 வழக்குகளும் பதிவாகியிருந்தன.
இதேபோல, பெண்களை மானபங்கப்படுத்தியதாக 2024-ஆம் ஆண்டு 3,233 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023-ஆம் ஆண்டு 3,084 வழக்குகளும், 2022-ஆம் ஆண்டு 2,928 வழக்குகளும் பதிவாகியிருந்தன.
இருப்பினும் வரதட்சணை மரணம், கணவா் மற்றும் உறவினா்கள் கொடுமைப்படுத்துதல் தொடா்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு: இதேபோல குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) பதியப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகள் கடந்த 2022- ஆம் ஆண்டு 3,620 வழக்குகள், 2023-ஆம் ஆண்டு 3,407 வழக்குகள் என பதிவு செய்யப்பட்டன. இது 2024-ஆம் ஆண்டு பல மடங்கு உயா்ந்து 5,319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பிற வழக்குகள், 2022-ஆம் ஆண்டு 1,348 வழக்குகள், 2023-ஆம் ஆண்டு 1,174 வழக்குகள் என பதிவு செய்யப்பட்டன. இது 2024-ஆம் ஆண்டு உயா்ந்து 1,650 வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.