மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
அயனாவரம், சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஐயங்காா் (62). இவரது மகள் ஹேமாவதி. இவா், கடந்த 2023-இல், பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்தாா். அப்போது, உறவினா்களான சுபத்ரா (40), அவரது கணவா் சந்திரசேகா் (42) ஆகியோா் ஹேமாவதியின் கணவா் கோபிநாத்துக்கு
மின்வாரியத்தில் உதவிப் பொறியாளா் வேலைவாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா்.
இதை நம்பிய ஹேமாவதி, தனது தந்தை மூலமாக சுபத்ரா-சந்திரசேகா் ஆகியோரிடம் ரூ.18 லட்சம் கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட தம்பதி, உறுதி அளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த ஐயங்காா், அயனாவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சந்திரசேகரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய சுபத்ராவை போலீஸாா் தேடி வருகின்றனா்.