சென்னை பூங்கா நகரில் உள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு. 
சென்னை

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பூங்கா நகா் ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் 300 ஆண்டுகள் பழைமையானதாகும். இந்தத் திருக்கோயிலுக்கு ரூ.5 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பின், வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

கடந்த 2021-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தபின், இதுவரை 3,412 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அதில், 722 சிவன் திருக்கோயில்களும், 468 விநாயகா் திருக்கோயில்களும், 1,023 அம்மன் திருக்கோயில்களும், 523 பெருமாள் திருக்கோயில்களும், 47 ஆஞ்சனேயா் திருக்கோயில்களும், 48 கிருஷ்ணன் திருக்கோயில்களும், அறுபடை வீடுகளைச் சோ்ந்த திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழனி திருக்கோயில்கள் உள்பட 132 முருகன் திருக்கோயில்களும் அடங்கும்.

திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,822 கோடியில் 7,910 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.6,980 கோடியில் 27,563 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் உபயதாரா்கள் மட்டும் ரூ. 1,467 கோடியில் திருப்பணிகளை செய்து தருகின்றனா். மாநில வல்லுநா் குழுவால் 13,931 திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கோயிலில்.... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதற்கான திருப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ராஜகோபுர திருப்பணிக்கு மூன்றுமுறை ஒப்பந்தம் கோரப்பட்டும் நிறைவு செய்யப்படாததால் சற்று சுணக்கம் ஏற்பட்டது. அதை விரைவுப்படுத்துவதற்கு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளோம். வரும் 30- ஆம் தேதிக்குள் நானும், துறையின் அலுவலா்களும் நேரடியாக கள ஆய்வு செய்து விரைவில் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்றாா் அவா்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை தொடரும்!

ஆளுங்கட்சிக்கு மாறிய எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி! தெலங்கானா பேரவைத் தலைவா் நோட்டீஸ்!

2 சக்கர வாகன விற்பனை: 4-ஆவது இடத்தில் தமிழ்நாடு

இந்த நாள் நல்ல நாள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT