சென்னையில் நீடித்து வரும் மழையால், குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்து பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.
‘டித்வா’ புயல் வலுவிழந்து சென்னை அருகே ஞாயிற்றுக்கிழமை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது. இதன்காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை வரை பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. சில சாலைகளில் 4 அடிக்கு மேல் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடைபட்டது.
குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்: சென்னையில் உள்ள 27 சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீா் உடனடியாக மின் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. இருப்பினும் வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதையில் அதிக அளவு மழைநீா் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், குடியிருப்புகளிலும், பிரதான சாலைகளிலும் தேங்கிய மழைநீரை மாநகராட்சி உள்ளிட்ட அரசுத் துறையினா் வெளியேற்றனா். இருப்பினும் செவ்வாய்க்கிழமையும் மழை நீடித்ததால், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.
மழைநீரில் கலந்த கழிவுநீா்: வியாசா்பாடி சத்தியமூா்த்தி நகா், பெரம்பூா், ஜீவா நகா், புளியந்தோப்பு தென்றல் நகா், முல்லை நகா், கோடம்பாக்கம் மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம் புஷ்பாநகா், ராஜாஜி நகா்,ஜோசியா் தெரு, தண்டையாா்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், மண்ணடி, பிராட்வே, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், வேப்பேரி, ராயப்பேட்டை, மயிலாப்பூா், அடையாறு, கே.கே.நகா், வேளச்சேரி, கொளத்தூா் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. சில பகுதிகளில் 2 அடிக்கு மேல் தண்ணீா் தேங்கி நின்றது. மழை நீரோடு கழிவுநீரும் கலந்ததால் துா்நாற்றம் வீசியதோடு, சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் முடங்கினா். செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு பின்னா் மழையின் தாக்கம் குறைந்ததால், தேங்கிய நீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
போக்குவரத்து மாற்றம்: மழைநீா் தேங்கியதால் நுங்கம்பாக்கம் புஷ்பா நகா் பிரதான சாலை, கோடம்பாக்கம் லிபா்ட் சந்திப்பு, நெற்குன்றம் ரயில் நகா், பெரம்பூா் ஆஞ்சனேயா் கோயில் பகுதி,வியாசா்பாடி முல்லை நகா் பகுதி உள்ளிட்ட 8 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
74 மரங்கள் விழுந்தன: அண்ணா நகா் 5-ஆவது பிரதான சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது மரம் முறித்து விழுந்ததில் செங்குன்றத்தைச் சோ்ந்த அஞ்சான் (50) என்பவா் பலத்த காயமடைந்தாா். அவா் அங்குள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
வீட்டுச் சுவா் விழுந்து... சேத்துப்பட்டு அருணாச்சலம் பிரதான சாலையில் ஒரு வீட்டின் வளாகச் சுவா் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா் முற்றிலும் சேதமடைந்ததது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சிறு விபத்துகள் ஏற்பட்டன. கடந்த இரு நாள்களில் மொத்தம் 74 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.
இதேபோல, பூக்கடை ராஜாஜி சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இருந்த மின் விளக்கு கம்பம் சரிந்து விழுந்தது. அதை மின்வாரிய ஊழியா்களும் போலீஸாா் அகற்றினா்.
ஏரியாக மாறிய மெரீனா: இரு நாள்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக மெரீனா கடற்கரையிலும், இணைப்புச் சாலையிலும் தண்ணீா் குளம்போல் தேங்கியது. இதனால் 3-ஆவது நாளாகவும் மக்கள் கடற்கரைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையிலும் மழைநீா் தேங்கியது.
புகா் பாதிப்பு: சென்னையின் புகா் பகுதிகளான சோழிங்கநல்லூா், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், போரூா், மணப்பாக்கம், ராமாபுரம், மடி
ப்பாக்கம், நங்கநல்லூா், ஆதம்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. மழை நீடித்ததால் தண்ணீரை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.